வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது: ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-20 21:45 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 

கடும் வறட்சியை ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தித்து வந்த வேளையில் தற்போது கனமழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலையும் பலத்த மழை பெய்தது. இதில் ரைட்டன்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

இந்த பகுதியில் நீர்வழிப்பாதை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டதே வீடுகளுக்குள் மழை நீர் புகுவதற்கு காரணம் எனக்கூறி அந்தப்பகுதியில் வசிப்போர் குலாளர் தெரு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியில் வந்த அரசு பஸ்சையும் சிறைபிடித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மொட்டபத்தான் கண்மாயிலிருந்து திருமுக்குளம் செல்லும் நீர் பாதை முழுவதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

தகவல் அறிந்து நகர் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நகராட்சி அலுவலர்களை வரவழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தனர். ஜே.சி.பி. எந்திரம் கொண்டுவரப்பட்டு பணிகள் நடை பெற்றன. இதனைதொடர்ந்து பொது மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் சந்திரபிரபா எம்.எல்.ஏ.யும் அந்த பகுதிக்கு சென்று பணிகளை முடுக்கி விட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில், ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் உள்ளது. இந்த குளம் நிரம்பினால் நகரின் பல பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். குளம் வறண்டு கிடந்த நிலையில் தற்போதைய மழையினால் தண்ணீர் வருகிறது. எனினும் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு மழைக்காலத்தில் குளத்தின் கரை சேதமடைந்து இடிந்து விழுந்தது. இதனை மண் மூடைகள் கொண்டு தற்காலிகமாக அடைத்து வைத்திருந்தார்கள். மேலும் குளத்தின் கரைகளை மராமத்து செய்வதற்கு தொல்லியல் துறையிலிருந்து வந்து பார்வையிட்டுச் சென்றார்கள். ஆனால் குளத்தின் கரையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகளும் உடைந்து கீழே விழுந்துவிட்டன.

மழை தொடர்ச்சியாக பெய்தால் சில நாட்களில் குளம் நிரம்பும் நிலை உள்ளது. கரை உடைந்து நீர் குடியிருப்புகளுக்குள் புகும் நிலை உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் திருமுக்குளத்தின் கரையை செப்பனிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்