வாக்காளர் பட்டியலில் சேருவதற்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பம் 31-ந்தேதி கடைசிநாள்
மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் சேருவதற்கு இதுவரை 30 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். வருகிற 31-ந்தேதி விண்ணப்பம் செய்ய கடைசி நாள் ஆகும்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
மேலும் இறந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல், முகவரி திருத்தம், தொகுதிக்குள் இடம் மாறுதல் தொடர்பாகவும் விண்ணப்பம் பெறப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 94 வாக்குச்சாவடி மையங்களிலும் தினம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அதுதவிர சிறப்பு முகாம்களும்நடத்தப்பட்டன.
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்காக இதுவரை 30 ஆயிரத்து 424 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் 1,572 பேரை நீக்கம் செய்ய விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.
இதுதவிர முகவரியில் திருத்தம் செய்வதற்கு 3 ஆயிரத்து 561 பேரும், தொகுதிக்குள் இடம் மாறுவதற்கு 2 ஆயிரத்து 254 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். இதன் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், தொகுதிக்குள் இடம்மாறுதல் தொடர்பாக மொத்தம் 37 ஆயிரத்து 811 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதற்கு வருகிற 31-ந்தேதி கடைசிநாள் ஆகும். அதன்பின்னர் அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, ஜனவரி 4-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எனவே, 1.1.2019 அன்று 18 வயது பூர்த்தியாகும் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.