தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி வாலிபர் சாவு

சேலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2018-10-20 22:45 GMT
சேலம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் சின்னதம்பி (வயது 22). இவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் 2 ஆண்டுகள் வேலை செய்து வந்தார். பின்னர் அவர் சேலத்தில் வேலை செய்வதற்காக, சென்னையில் இருந்து சமீபத்தில் சேலத்திற்கு வந்தார்.

இதையடுத்து சின்னதம்பி வேலை கேட்டு பல்வேறு கம்பெனிகளுக்கு சென்று வந்தார். ஆனால் அவருக்கு உடனடியாக வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைக்காததால் வீட்டின் அருகே உள்ள ஒரு மைதானத்தில் சின்னதம்பி கிரிக்கெட் விளையாட சென்று வந்தார். நேற்று முன்தினம் விளையாட சென்ற சின்னதம்பி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சின்னதம்பி குடும்பத்தினர் அக்கம் பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று வீட்டின் அருகே உள்ள தண்டவாளம் பகுதியில் சின்னதம்பி இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் விளையாட செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரெயில் சின்னதம்பி மீது மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சின்னதம்பி உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்