வாய்க்கால்களை தூர்வாரியதன் மூலம் அரசின் பணம் ரூ.20 கோடி சேமித்துள்ளோம்; முதல்–அமைச்சருக்கு, கவர்னர் பதில்
வாய்க்கால்களை தூர்வாரியதன் மூலம் அரசின் பணம் ரூ.20 கோடி சேமித்துள்ளோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு, கவர்னர் கிரண்பெடி பதில் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடிக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்தநிலையில் மாநில வளர்ச்சிப்பணிகளுக்காக தனியார் தொழிற்சாலை, நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் வழங்கும் சமூக பொறுப்புணர்வு நிதியில் (சி.எஸ்.ஆர்.) ரூ.85 லட்சத்தை கவர்னர் கிரண்பெடி தவறாக கையாளுவதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் முதல்–அமைச்சர் நாராயணசாமி சமீபத்தில் குற்றஞ்சாட்டி இருந்தார். இதை கிரண்பெடி மறுத்தார்.
இந்த நிலையில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–
சமூக பொறுப்புணர்வு நிதி விவகாரத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்கிறார். இதனை யாரும் நம்பமாட்டார்கள். புதுச்சேரியில் நீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்கும், தூர்வாரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலமாக அரசுக்கு ரூ.20 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகையின் நடவடிக்கைகள் வெற்றி பெறக்கூடாது என முதல்–அமைச்சர் நாராயணசாமி நினைக்கிறார். மக்களுக்காக முதல்–அமைச்சர் இதுபோன்ற எதுவும் செய்து உள்ளாரா? அவரால் இதுபோல் செய்ய முடியுமா?
நன்கொடை தரும் நிறுவனங்கள் நேரிடையாக பணியை மேற்கொண்டனர். பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மேற்பார்வை செய்தனர். பண பரிமாற்றம் எங்கும் நடைபெறவில்லை. நன்கொடை கொடுக்க விரும்பும் நிறுவனங்களையும், தூர்வார எந்திரம் கொடுப்பவர்களையும் இணைக்கும் பணியை கவர்னர் மாளிகை மேற்கொண்டது. இதில் வெளிப்படையான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஒருங்கிணைந்த முயற்சியால் ஏழை எளிய மக்களுக்கு தேவையான தண்ணீர் ஏரி, குளம் மற்றும் வாய்க்கால்கள் மூலம் கொண்டு வரப்பட்டு குடிநீருக்கும், சாகுபடிக்கும், துப்புரவுக்கும், தோட்டத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வெற்றி மேல் வெற்றி கிடைத்துள்ளது. கடவுளின் அருளால் உண்மையான, தூய்மையான பாதையில் நடக்கிறோம்.
உண்மையை யாரும் வெல்ல முடியாது. நம்மால் முடிந்ததை சிறப்பாக செய்ய வேண்டும். மழைநீரை மக்களுக்கு கொடுத்துள்ளோம். ஒப்பந்ததாரர்களின் ராஜ்ஜியம் உடைக்கப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகை மூலம் 200–வது கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 86 கி.மீ. தூரம், 23 தண்ணீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டது தொடர்பாக மறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி தனிப்பட்ட மற்றும் வரலாற்று சிறப்பு மிக்கது. பிரதமர் மோடியை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டது. கால்வாய்களை தூர்வாருவதற்கான நன்கொடை அளித்தவர்கள் அடுத்த மாதம்(நவம்பர்) 3–ந் தேதி மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகையில் விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.