பொறியியல் மாணவரை கடத்தி தாக்கிய கஞ்சா கும்பலை சேர்ந்த ஒருவர் கைது

கல்லூரி மாணவரை கத்திமுனையில் கடத்தி தாக்கிய கஞ்சா கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-20 22:00 GMT

பாகூர்,

தவளக்குப்பத்தை அடுத்த ஆண்டியார்பாளையம்பேட் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் சசி அரிகரன் (வயது 20). பொறியியல் கல்லூரி மாணவர். இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் தானாம்பாளையம் பகுதியில் வந்தார்.

அப்போது தானாம்பாளையத்தை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சசி அரிகரனை வழிமறித்து, கத்தி முனையில் நல்லவாடு அருகே உள்ள முந்திரி தோப்புக்கு கடத்திச்சென்றனர். அங்கு அவருடைய ஆடைகளை கழற்றி சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். காயமடைந்த மாணவரை நல்லவாடு கிராம மக்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த ஆண்டியார்பாளையம் பேட் பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டவர்கள் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, சசி அரிகரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோ‌ஷமிட்டனர். தகவல் அறிந்த தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், கஞ்சா விற்பனை செய்தவர்களை சசி அரிகரன் போலீசிடம் தெரிவித்ததால், கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்தவர்கள் அவரை கடத்தி தாக்கியுள்ளனர். எனவே கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்று கூறினர். இதையடுத்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்த பிரேம்குமார், அவரது கூட்டாளிகள் ஆனந்த், அனந்தராமன், பவித்ரன் உள்பட 8 பேர் மீது தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இதில் தவளக்குப்பம் சடா நகரை சேர்ந்த பவித்ரன் (20) என்பவர் போலீசில் சிக்கினார். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேம்குமார் உள்பட மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்