மது பழக்கத்தை கணவன் கைவிடாததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை கும்பகோணத்தில் பரிதாபம்

மது பழக்கத்தை கணவன் கைவிடாததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-10-20 22:15 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ராமச்சந்திரபுரம் தெருவை சேர்ந்தவர் சுதாகர். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சீதாலட்சுமி (வயது25). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். சுதாகர் தினந்தோறும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்ததால், அவருக்கும், சீதாலட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

மது பழக்கத்தை கைவிடும்படி சுதாகரிடம், சீதாலட்சுமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் சுதாகர் மது பழக்கத்தை கைவிடவில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று மது அருந்தி விட்டு வந்த சுதாகருக்கும், சீதாலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த சீதாலட்சுமி வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சீதாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மது பழக்கத்தை கணவன் கைவிடாத காரணத்தால் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்