ஜவுளி கடைகளை அகற்ற எதிர்ப்பு: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு

ஜவுளி கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-20 22:30 GMT

ஈரோடு,

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஜவுளி கடைகள் 330–ம், வார கடைகள் 740–ம் என மொத்தம் 1,070 ஜவுளி கடைகள் உள்ளன.

பழைய கட்டிடத்தில் கடைகள் செயல்பட்டு வருவதால், அதை இடித்துவிட்டு நவீன வணிக வளாகம் கட்ட மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 5 ஆண்டுளாக மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கனி மார்க்கெட்டில் உள்ள பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு, ரூ.50 கோடி செலவில் 3 மாடிகள் கொண்ட நவீன வணிக வளாகம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்புதல் விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில், அங்குள்ள ஜவுளி கடைகளை அகற்றக்கோரி மாநகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதனால் கனிமார்க்கெட் தினசரி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட், வாரச்சந்தை தலைவர் செல்வராஜ் உள்பட 100–க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஒன்று திரண்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘ஈரோடு கனிமார்க்கெட் என்பது இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும். இங்கு இருக்கும் கடையே போதுமானது. கடைகளை அப்புறப்படுத்தினால் வியாபாரமும், எங்களுடைய வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கும். எனவே கடைகளை அப்புறப்படுத்த கூடாது’ என்றனர்.

அதற்கு மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கான் பதில் அளித்து கூறும்போது, ‘அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. தேர்தலுக்குள் நிதி பெற வில்லை என்றால், அடுத்து ஆட்சிக்கு வருவோர் நிதி வழங்குவார்களா? என்பது தெரியாது. ஆகையால், விரைவில் ஸ்மார்ட் சிட்டிக்கான நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கனி மார்க்கெட்டில் வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையில் எந்த மாற்றமும் கிடையாது.

இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு வணிக வளாகம் கட்டி முடிக்க 2 ஆண்டுள் ஆகும். எனவே அதுவரை உங்களுக்கு, ஈரோடு வ.உ.சி. பூங்கா, சோலார், காளைமாட்டு சிலை, டெக்ஸ்வேலி ஆகிய 4 இடங்களில் மாற்றும் இடம் வழங்கப்படும். இதில் உங்களுக்கு எந்த இடம் ஏற்றதோ அந்த இடத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்றார்.

இதைத்தொடர்ந்து வியாபாரிகள் தாங்கள் கலந்து ஆலோசனை செய்து முடிவை தெரிவிக்கிறோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்