பெட்ரோல் ‘பங்க்’ கில் பயங்கரம்; கியாஸ் நிரப்பிய போது சிலிண்டர் வெடித்து ஆட்டோ நொறுங்கியது
மலாடில் பெட்ரோல் ‘பங்க்’ கில், கியாஸ் நிரப்பிய போது சிலிண்டர் வெடித்து ஆட்டோ நொறுங்கியது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை,
மும்பை மலாடு மேற்கு எஸ்.வி. சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இங்கு வாகனங்களுக்கு கியாசும் நிரப்பப்படுகிறது. நேற்று காலை 8 மணியளவில் ஒரு ஆட்டோவிற்கு கியாஸ் நிரப்பப்பட்டு கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஆட்டோவின் கியாஸ் சிலிண்டர் பயங்கரமாக வெடித் தது. இதில் ஆட்டோ நொறுங்கியது.
இந்த சம்பவத்தில் ஆட்டோ அருகில் நின்று கொண்டிருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஆட்டோவின் கியாஸ் சிலிண்டர் வெடித்த போது, அந்த பகுதியே அதிர்ந்தது.
இதனால் குண்டு தான் வெடித்து விட்டதோ என அக்கம்பக்கத்தினர் பதறி அடித்து கொண்டு ஓடி வந்தனர். உடனடியாக இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயத்துடன் துடித்து கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில் அவர்களது பெயர் அனில் மோரே (வயது57), சோகைல் சேக் (57), சைலேஷ் திவாரி (25) என்பது தெரியவந்தது. இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பெட்ரோல் பங்க் தப்பியது. இல்லையெனில் பெரியளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
ஆட்டோ கியாஸ் சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.