பெரிச்சிபாளையத்தில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் அருகே பெரிச்சிபாளையத்தில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நல்லூர்,
திருப்பூர் மாநகராட்சி 51–வது வார்டில் பெரிச்சிபாளையம், வினோபாநகர், அண்ணன்மார் காலனி, கோபால்நகர், பட்டுக்கோட்டையார் நகர் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சேகரமாகும் குப்பைகளை பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் கொட்டி அங்கு உரம் தயாரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக அங்கு ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்ள பொக்லைன் எந்திரம் நேற்று வரவழைக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிச்சிபாளையம்–திரு.வி.க.நகர் சாலையில் திரண்டனர்.
பின்னர் பெரிச்சிபாளையம் சுடுகாட்டில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரி கவுரிசங்கர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–
பெரிச்சிபாளையம் சுடுகாட்டில் உரக்கிடங்கு அமைத்தால், அதை சுற்றி உள்ள பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும். நாள் முழுக்க துர்நாற்றம் வீசும். பொதுமக்கள், சிறுவர்கள், வயதானவர்கள், நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஈக்கள் தொல்லை அதிகரித்து விடும்.
எனவே இங்கு உரம் தயாரிக்கும் கிடங்கு அமைக்க கூடாது என்று எழுத்து பூர்வமாக எழுதிக்கொடுக்கும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து பெரிச்சிபாளையம் பகுதியில் உரக்கிடங்கும் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படுகிறது என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரி எழுத்து பூர்வமாக எழுதிக்கொடுத்தார். அதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.