கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ ஊரக நலத்துறை இயக்குனர் ஆய்வு
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ ஊரக நலத்துறை இயக்குனர் டாக்டர் ருக்மணி ஆய்வு மேற்கொண்டார்.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய அளவிலான தகுதிச் சான்றிதழ் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனர் டாக்டர் ருக்மணி நேற்று கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். அவர், அரசு ஆஸ்பத்திரியின் அனைத்து வார்டுகள் மற்றும் சமையல் அறைக்கு சென்று பார்வையிட்டார். நோயாளிகளிடமும் குறைகளை கேட்டு அறிந்தார்.
அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், நிலைய மருத்துவர் பூவேசுவரி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். எனவே இங்கு பணியாற்றும் டாக்டர்களை மாற்று பணியிடங்களுக்கு அனுப்ப கூடாது என்று டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் மோசஸ்பால், மருத்துவ ஊரக நலத்துறை இயக்குனர் டாக்டர் ருக்மணியிடம் வலியுறுத்தினார். இதேபோன்று கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் போதிய குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று த.மா.கா. நகர தலைவர் ராஜகோபால், டாக்டர் ருக்மணியிடம் வலியுறுத்தினார்.