மதுரை அருகே விபத்து: மூதாட்டி-மகள்-பேத்தி- கொள்ளுப்பேரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், கார் மோதி பலி
மூதாட்டி, அவருடைய மகள், பேத்தி மற்றும் கொள்ளுப்பேரன் என 4 தலைமுறையை சேர்ந்தவர்கள் விபத்தில் பலியான துயர சம்பவம் நேர்ந்துள்ளது. சாலையோரம் நடந்து சென்ற போது தறிகெட்டு ஓடிய கார் மோதியதால் அவர்கள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள வடுகபட்டி பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தன். இவருடைய மனைவி மரத்தி (வயது 63). இவருடைய மகள் லட்சுமி (45).
லட்சுமியின் மகள் வசந்தி (22). அவருடைய 8 மாத ஆண் குழந்தை ஆத்விக். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறையை சேர்ந்த இவர்கள் நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக வடுகபட்டி பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கார் அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த காரின் முன்பக்க டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
அப்போது வடுகபட்டி பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த மரத்தி, லட்சுமி, வசந்தி, இவரது ஆண் குழந்தை ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. பின்னர் அந்த கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் இந்த கோர விபத்து நடந்து முடிந்தது. கார் மோதியதில் மரத்தி, லட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்கள்.
வசந்தி, ஆத்விக் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். இதற்கிடையே பள்ளத்தில் பாய்ந்த காருக்குள் சிக்கியவர்களும் அலறினார்கள். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காருக்குள் சிக்கியவர்கள் காயத்துடன் உயிர் தப்பினார்கள்.
ரத்தவெள்ளத்தில் கிடந்த வசந்தி, அவருடைய குழந்தை ஆத்விக் ஆகியோர் உடனடியாக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே தாயும், மகனும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தலைமுறையை சேர்ந்தவர்கள் பலியான சம்பவம் குறித்து அறிந்ததும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து, 4 பேரின் உடல்களையும் பார்த்து கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காரில் வந்தவர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களிடம் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது காரில் வந்தவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. கோவை சூலூர் சுல்தான் பேட்டையில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் முருகேசன் (51). இவர், தன்னுடைய மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் காரில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு சென்றிருந்தார். பின்னர் கோவைக்கு புறப்பட்டு வந்தனர். காரை முருகேசன் ஓட்டி வந்துள்ளார்.
மதுரை அருகே வடுகப்பட்டி பகுதியில் வந்த போது அந்த கார் மோதி, 4 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.