வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு விரல்ரேகை பதிவு
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வான வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 373 பேருக்கு நேற்று விரல்ரேகை பதிவு செய்யப்பட்டது.
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு தேர்வான வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 373 பேருக்கு நேற்று விரல்ரேகை பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிறைக்காவலர் பணிக்கான தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
அவர்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போட்டிகள் நடத்தி தகுதி சரிபார்க்கப்பட்டது. மேலும் மார்பளவு, உயரம் சரி பார்க்கப்பட்டது. இதில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 377 பேர் தேர்வானார்கள்.
இதற்கான முடிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேற்று விரல் ரேகை பதிவு செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்ள ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருந்த 377 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 2 பேருக்கு வேறு வேலை கிடைத்துவிட்டதால் அவர்கள் விரல்ரேகை பதிவுக்கு வரவில்லை. அதேபோன்று மேலும் 2 நபர்கள் கலந்து கொள்ளவில்லை. மற்ற 373 பேரும் விரல்ரேகை பதிவுக்கு வந்திருந்தனர்.
இவர்களில் 290 பேர் ஆண்கள். 83 பேர் பெண்கள். அவர்களுக்கான விரல்ரேகை பதிவு செய்யும் பணி வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் விரல்ரேகை பதிவை தொடங்கி வைத்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
நாளை (திங்கட்கிழமை) மருத்துவ பரிசோதனை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு 6 மாதம் பயிற்சியளிக்கப்பட இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.