காஞ்சீபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-20 22:45 GMT

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ள அரசு தொகுப்பு வீடுகள் பழுதடைந்துள்ளதாகவும், இந்த வீடுகளை புதுப்பித்து தருமாறு மக்கள் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் அடிப்படையில் ஊரகப்பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளை ஒரு வீட்டுக்கு ரூ.50 ஆயிரம் செலவில் புதுப்பிக்க தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு உத்தரவின் படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அரசு திட்டத்தின் கீழ் 1993– 94 அல்லது அதற்கு முன்னர் கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீடுகளில் பழுதடைந்த வீட்டின் தளம் சரிசெய்தல், ஓழுகும் நிலையில் உள்ள வீடுகளின் மேல் தளத்தில் ஓடுகள் பொருத்தும பணி, பூச்சு வேலைகள், சுவர் விரிசல்கள் சரி செய்தல், தரை அமைத்தல், பழுதடைந்த கதவு மற்றும் ஜன்னல்கள் பொருத்துதல் போன்ற புதுப்பிப்பு பணிகளை செய்து கொள்ள வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் விண்ணப்பங்களை வழங்கலாம்.

பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளை இந்த திட்டத்தின்கீழ் புதுப்பிக்க இயலாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்