தீபாவளி போனஸ் அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் - வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கோரிக்கை

தீபாவளி போனஸ் அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என்று வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-10-20 22:45 GMT

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுவையை ஆளும் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அரசு மாநிலத்தின் வளர்ச்சியை சீர்குலைத்துள்ளதோடு, மக்களின் அன்றாட வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி வாட்டி வதைத்து வருகிறது. நிர்வாக திறமையற்ற, அலங்கோல ஆட்சி நடத்தி வரும் காங்கிரசால் புதுச்சேரி மக்கள் நாள்தோறும் வேதனையில் வாடிவருகின்றனர். விவசாயம் மடிந்து தொழில்கள் நசிந்து மீன்பிடி தொழில் முடக்கப்பட்டு, அரசு சார்பு நிறுவனங்கள் மூடப்பட்டு அனைத்து தரப்பு தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது.

அரசின் கட்டுப்பட்டின்கீழ் இயங்கும் வாரியங்கள், முகமைகள், கழகங்கள் என 50–க்கும் மேற்பட்ட அரசு சார்பு நிறுவனங்கள் உள்ளன. ஆட்சியாளர்களின் திணிப்பாலும், ஊழல் நிர்வாகத்தாலும் இந்த நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. அப்பாவி தொழிலாளர்களே இந்த நஷ்டத்துக்கு காரணம் என வீண்பழி சுமத்தி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்த காங்கிரஸ் அரசு எடுத்து வரும் முயற்சிகளை அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 6 மாதம் முதல் 60 மாதம் வரை சம்பள வழங்கப்படாமல் உள்ளது.

வீட்டுவாடகை, கல்விக்கட்டணம், மின்கட்டணம் என எதையும் செலுத்த முடியாமல் தொழிலாளர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக சிதைந்து நிற்கின்றனர். பல குடும்ப தலைவர்கள் வேதனை தாள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நெஞ்சில் சூட்டுக்கோலை பாய்ச்சுகின்றன. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய பணிக்கொடையைக்கூட அரசு வழங்காமல் வஞ்சித்து வருகிறது.

விரைவில் தீபாவளி பண்டிகை வர உள்ளது. இந்த பண்டிகையை எப்படி கொண்டாடுவது? என்று அந்த ஊழியர்கள் வேதனையில் மூழ்கியுள்ளனர். பெற்ற குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியாமல் ஏங்கிப்போய் உள்ளனர். ஆனால் ஆட்சியாளர்கள் இதைப்பற்றி கவலைப்படவில்லை. கவர்னர் மீது என்ன குறை கூறலாம்? கட்சிக்குள் எப்படி கலகம் விளைவிக்கலாம்? என்ற சிந்தனையிலேயே மூழ்கிப்போய் உள்ளனர். பொதுமக்களுக்காக திறக்கப்படும் மலிவுவிலை மளிகை அங்காடி, பட்டாசு அங்காடிகளைக்கூட அரசு திறக்க முடியாமல் திறமையற்றுப்போய் உள்ளது.

இது அனைத்தையும் புதுச்சேரி மக்கள் உன்னிப்பாக கவனித்தே வருகின்றனர். ஆட்சியாளர்கள் தங்கள் ஆணவத்தை களைந்து புதுச்சேரியில் வாழும் தொழிலாளர்களை காக்கும் வகையில் தீபாவளி போனஸ், உதவித்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

இவ்வாறு வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்