‘சவரன் தங்கப் பத்திரம்’ பற்றித் தெரியுமா?

நேரடியாகத் தங்கம் வாங்குவதைக் குறைத்து பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் தங்க இறக்குமதிக்கு ஆகும் செலவைக் குறைக்கலாம் என்று அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே சவரன் தங்கப் பத்திரம் ஆகும்.

Update: 2018-10-20 07:14 GMT
சவரன் தங்கப் பத்திர திட்டத்தின் கீழ் இந்த அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை தொடர்ந்து 5 மாதங்களுக்கு முதலீடு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேரடி தங்கத்தை எப்படி கிராம் கணக்கில் வாங்க முடியுமோ அதேபோன்று சவரன் தங்கப் பத்திர திட்டத்திலும் முதலீடு செய்ய முடியும். தங்கத்தின் சந்தை விலைக்கு ஏற்றவாறு இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ள பணத்தின் மதிப்பும் லாபம் அளிக்கும்.

சவரன் தங்கப் பத்திரத்தை மத்திய அரசின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. சில்லறை முதலீட்டாளர்கள், தங்கப் பத்திரத்தை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் ஸ்டாக் எக்சேஞ்ச் வாயிலாகப் பெற்று முதலீடு செய்ய முடியும்.

சவரன் தங்கப் பத்திர திட்டத்தில் குறைந்தது 1 கிராம் முதல் முதலீடு செய்ய முடியும். இப்பத்திரத்தில் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 4 கிலோ வரை முதலீடு செய்ய முடியும். அதேநேரம், அறக்கட்டளை மற்றும் அதுபோன்ற அமைப்புகள் என்றால் 20 கிலோ வரை சவரன் தங்கப் பத்திர திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

சவரன் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் ஆகும்போது முதிர்வடையும். இடையில் வெளியேற வேண்டும் என்றால் 5, 6, 7 ஆண்டுகளில் வட்டித் தொகை செலுத்தப்படும்போது வெளியேறலாம்.

சந்தையில் விற்கப்படும் சுத்த தங்கத்தைவிட கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைவாக செலுத்தித் தங்கப் பத்திரத்தை வாங்கலாம்.

சவரன் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வோர் அரையாண்டின்போதும் 2.5 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும்.

வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ் சவரன் பத்திரம் மூலம் கிடைக்கும்லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும். அதேவேளை, தனி நபர்களுக்கு மூலதன ஆதாயங்கள் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தை வைத்து எப்படிக் கடன் பெற முடியுமோ அதேபோன்று சவரன் தங்கப் பத்திரத்தையும் அடமானம் வைத்துக் கடன் பெற முடியும்.

பான் அல்லது டான் அல்லது ஆதார் கார்டு போன்ற அடையாள முகவரிச் சான்றுகளை சமர்ப்பித்து சவரன் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.

மேலும் செய்திகள்