தனியார் பள்ளி நிர்வாகியிடம் கவர்னர் கிரண்பெடி போன் மூலம் நிதி கேட்டார்- நாராயணசாமி திடுக்கிடும் குற்றச்சாட்டு

கவர்னர் கிரண்பெடி தனியார் பள்ளி நிர்வாகியிடம் போனில் பேசி நிதி கேட்டார் என்று புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார்.

Update: 2018-10-19 23:45 GMT

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சமூக பொறுப்புணர்வு நிதி தொடர்பாக நான் உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி வருவதாக கவர்னர் கூறியுள்ளார். நிதிநிலைகளை பாதுகாக்க, வாய்க்கால்களை தூர்வார பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் நிதி வழங்க கவர்னர் கோரிக்கை விடுப்பதில் தவறில்லை. ஆனால் தனியார் நிதி வழங்கியது தொடர்பாக மாநில மக்கள் மத்தியில் சந்தேகத்தை கவர்னர் அலுவலகம் ஏற்படுத்தி உள்ளது.

நீர்நிலைகளை தூர்வாருவது தொடர்பாக அதிகாரிகள் எந்தவித கோப்பும் தயாரிக்கவில்லை. இதுதொடர்பாக திட்டம் தயாரிக்கப்பட்டு அதை முறைப்படி தலைமை பொறியாளர், அரசு செயலாளர், துறை அமைச்சர் ஒப்புதல் அளித்த பின்புதான் தூர்வாரியிருக்க வேண்டும். அந்த பணியையும் டெண்டர் விட்டு செய்திருக்க வேண்டும். மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் 2007–ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், பணிகளை காண்டிராக்டருக்கு நியமன அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் பொதுப்பணித்துறைக்கு சம்பந்தம் இல்லாமல், துறை அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது. இதில் தனியாருக்கு பணியை வழங்கியது யார்? என்பதற்கு கவர்னர் பதில் கூறவேண்டும். 24–9–2018 அன்று கவர்னர் அலுவலகத்தில் இருந்து ஒரு பணிக்கு மட்டும் குறிப்பாணை வந்துள்ளது.

கவர்னர் அலுவலகத்தில் இருந்து தனியாருக்கு போன் செய்து நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. 1–10–2018 அன்று மணவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகி ஜான்சனுக்கு கவர்னர் கிரண்பெடி போன் செய்துள்ளார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு, சமூக பொறுப்புணர்வு நிதியாக ரூ.6 லட்சம் கேட்டுள்ளார்.

அதன்படி அந்த நிர்வாகியும் காசோலை கொடுத்துள்ளார். இதேபோல் கவர்னர் அலுவலகத்தில் பணியாற்றும் ஆஷா, லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரிக்கு போன் செய்து ரூ.5.85 லட்சம் கேட்டுள்ளார். கவர்னர் பல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்துள்ளார். அதன்பின் தொலைபேசி மூலம் நிதி கேட்டுள்ளனர்.

நியமன எம்.எல்.ஏ. செல்வகணபதி கவர்னரிடம் தனது சம்பள காசோலையை வழங்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் செல்வகணபதி தனது காசோலையை கவர்னரிடம் கடந்த அக்டோபர் 1–ந்தேதி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். ஆனால் இப்போது இருவரும் பொய் செல்கிறார்கள்.

சமூக பொறுப்புணர்வு நிதி வசூலிக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா? கவர்னர் மாளிகை மூலம் எவ்வளவு நிதி வசூலிக்கப்பட்டது? என்பதற்கு கவர்னர் பதில் சொல்ல வேண்டும். அவரது செயல்பாடு குறித்து உள்துறை மந்திரி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்