போடி பகுதியில் கனமழை: 8 வீடுகளின் சுவர்கள் இடிந்தன - மரக்கிளை முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
போடி பகுதியில் பெய்த கனமழையால் 8 வீடுகளின் சுவர்கள் இடிந்தன. மரக்கிளை முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடி,
போடி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. போடி வட்டாரத்தில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. போடி அருகே சூலப்புரம் மேற்கு பகுதியில் உள்ள கண்மாய் கரையில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கிராமத்திற்குள் புகுந்தது.
மழையால் சூலப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது வீட்டின் சுவர் இடிந்தது. இதேபோல் ரவிக்கண்ணன், போத்திக்காளன், ஒண்டிவீரன் ஆகியோரின் வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தன. சுவர்கள் வெளிப்புறமாக விழுந்ததால் வீட்டில் தூங்கியவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல் போடி அருகே கரையான்பட்டி கிராமத்தில் காஜாமைதீன், சின்னம்மாள், நாகமலை ஆகியோரின் வீட்டு சுவர்கள் இடிந்தது. மேலும் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. போடி சில்லமரத்துப்பட்டி காந்திஜி தெருவில் பாண்டியன் என்பவரது வீட்டின் சுவர் பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்தது.
போடி நகர் போலீஸ் நிலையம் அருகே ஒரு வீட்டின் முன் பகுதியில் இருந்த வேப்பமரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் நேற்று காலை 10.30 மணியில் இருந்து 11 மணி வரை போக்குவரத்து பாதிக் கப்பட்டது.போடியை அடுத்த எரணம்பட்டி, முத்தையன்செட்டிபட்டி ஆகிய கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனையடுத்து அருகில் உள்ள கிராம மக்கள் அங்கு சென்று மீட்பு பணிகளில் உதவினர். இதனிடையே சில்லமரத்துப்பட்டி அருகே உள்ள குதுவல் கண்மாய் நிரம்பி அதன் ஒருபக்கம் கரையில் விரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தேனி மாவட்ட வருவாய் அதிகாரி கந்தசாமி நேரில் வந்து பார்வையிட்டு, கண்மாய் கரைகளை பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.