கொளத்தூர் அருகே: நிலத்தகராறில் அரசு ஊழியர் அடித்துக்கொலை - தம்பதி உள்பட 3 பேர் கைது
கொளத்தூர் அருகே நிலத்தகராறில் அரசு ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கொளத்தூர்,
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள செட்டிப்பட்டியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 56). இவர் கனிம வளத்துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அதே ஊரைச் சேர்ந்த மகாதேவன் (40) என்பவருக்கும், மயில்சாமிக்கும் இடையே நிலம் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள் ளது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த மகாதேவன், அவரது மனைவி அலமேலு (45), மகன் நந்தகுமார் (20) ஆகியோர் சேர்ந்து மயில்சாமியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த மயில்சாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே மயில்சாமி இறந்தது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள், மகாதேவனின் வீட்டை தாக்கி சேதப்படுத்தினர். கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் விரைந்து சென்று, மயில்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாதேவன், அலமேலு, நந்தகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.