தா.பேட்டை அருகே அச்சப்பன் கோவில் விழாவில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு

தா.பேட்டை அருகே அச்சப்பன் கோவில் விழாவில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2018-10-19 22:00 GMT
தா.பேட்டை, 

திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அச்சப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆயுத பூஜை மறுநாள் விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அச்சப்பன், அகோரவீரபத்திரர், மதுரைவீரன், வெடிகாரகுள்ளன், பாப்பாத்தி, மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு நேற்று முன்தினம் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். நேற்று காலை பெண்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் கோவிலில் இருந்து அச்சப்பன் மற்றும் அகோர வீரபத்திரன் உள்ளிட்ட சாமிகளை பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வாண வேடிக்கையுடன் அருகிலுள்ள காட்டு கோவிலுக்கு சுமந்து சென்றனர்.

அப்போது கோவிலை சேர்ந்த சேர்வைகாரர்கள் (பூசாரிகள்) தப்பு அடித்து நடனம் ஆடினர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. அந்த சமயத்தில் காட்டுக்கோவில் திடலில் நீண்ட வரிசையில் தலைவிரி கோலத்துடன் கைகளை உயர்த்தி மண்டியிட்டபடி அமர்ந்திருந்த பெண்களின் கைகளில் கோவில் பூசாரி சாட்டையால் அடித்தார். பின்னர் சாட்டை அடி வாங்கிய பெண்கள் கோவிலுக்கு சென்று சாமியை வழிபட்டு விபூதி பிரசாதம் வாங்கி சென்றனர். இந்த விழாவில் கலந்து கொண்டு பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் காத்துகருப்பு, பில்லி சூனியம், பேய்பிடித்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதாகவும், திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சாமியிடம் வேண்டி கொண்டு சாட்டையால் அடிவாங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று நம்புவதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மேலும் செய்திகள்