உல்லாசத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியை குத்திக் கொல்ல முயற்சி: வாலிபர் போலீசில் சரண்
பெங்களூருவில் உல்லாசத்திற்கு மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கள்ளக்காதலியை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற வாலிபர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தார்கள்.;
பெங்களூரு,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ராகவேந்திரா சாஸ்திரி என்கிற ரகு(வயது 36). இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். ஆனால் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக, அவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகரில் வசிக்கும் தன்னுடைய சகோதரி வீட்டில் ராகவேந்திரா வசித்து வருகிறார். இந்த நிலையில், ராகவேந்திராவுக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிரிஷா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சிரிஷாவும் திருமணமானவர். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.
இதற்கிடையில், ராகவேந்திராவுடன் சிரிஷாவுக்கு கள்ளத்தொடர்பு இருப்பது பற்றி சிரிஷாவின் கணவருக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மனைவியும், ராகவேந்திராவையும் கண்டித்தார். அதே நேரத்தில் ராகவேந்திரா, சிரிஷா இடையே பணப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர்கள் 2 பேரும் பேசுவதை நிறுத்தி விட்டனர். பின்னர் நேற்று முன்தினம் சிரிஷாவிடம் பேச வேண்டும் என்று ராகவேந்திரா அழைத்துள்ளார். இதையடுத்து, 2 பேரும் ராஜராஜேஸ்வரிநகரில் உள்ள கோவில் அருகே சந்தித்து பேசியுள்ளனர்.
அதன்பிறகு, ராகவேந்திராவும், சிரிஷாவும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது வரும் வழியில் நைஸ் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சிரிஷாவை ராகவேந்திரா உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது. ஆனால் அவர் மறுத்து விட்டு ராகவேந்திராவுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகவேந்திரா தன்னிடம் இருந்த கத்தியால் சிரிஷாவை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில், அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பின்னர் ராஜராஜேஸ்வரிநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற ராகவேந்திரா நடந்த சம்பவங்களை கூறி சரண் அடைந்தார்.
இதற்கிடையில், உயிருக்கு போராடிய சிரிஷா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில், பணப் பிரச்சினை மற்றும் உல்லாசத்திற்கு மறுத்ததால் சிரிஷாவை ராகவேந்திரா குத்திக் கொல்ல முயன்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ராஜராஜேஸ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகவேந்திராவை கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது.