பெண் போலீசின் கணவர் தற்கொலை: காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் பரிதாபம்

தக்கலை அருகே காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் பெண் போலீசின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Update: 2018-10-19 21:30 GMT
பத்மநாபபுரம்,


தக்கலை அருகே தெங்கன்குழியை சேர்ந்த ஜேம்ஸ் மகன் சஜின் வினு (வயது 26), இவர் மண்டைக்காட்டில் துணிக்கடை நடத்தி வந் தார். இவருக்கும், செம்பொன்விளையை சேர்ந்த ஜினி (22) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஜினி நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8 மாதத்துக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து கணவன்-மனைவி இருவரும் நாகர்கோவிலில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று சஜின் வினு ஊருக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு தெங்கன்குழிக்கு சென்றார். அங்கு வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் தூங்க சென்றார். மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை தட்டிய போது உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற போது, சஜின் வினு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக தக்கலை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சஜின் வினு மீது போலீஸ் நிலையத்தில் சில வழக்குகள் உள்ளதாகவும், இதனால் மனம் உடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் அவர் தற்கொலை முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இருந்தாலும் தற்கொலை முடிவுக்கான உறுதியான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த 8 மாதத்தில் பெண் போலீசின் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்