சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தை மறுசீராய்வு செய்யாவிட்டால் தமிழகத்திலும் போராட்டம் வெடிக்கும்; இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தை மறு சீராய்வு செய்யாவிட்டால் தமிழகத்திலும் போராட்டம் வெடிக்கும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறினார்.

Update: 2018-10-19 22:45 GMT

திருப்பூர்,

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று கொள்ள இயலாது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி மாற்று சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்டவர். அவர் கூறிய 3 தீர்ப்புகளும் கலாசாரத்தையும் பண்பாட்டையும் சிதைக்க கூடியதாக உள்ளது. காலம் காலமாக 10 வயதுக்குட்பட்ட 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு போகலாம் என்ற நிலை இருந்து வருகிறது. மாதவிடாய் அடைந்த பெண்கள் சென்றால், அங்குள்ள காட்டு விலங்குகளால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

இந்து கலாசாரத்தை நசுக்குவதில் சர்வதேச சதி இருக்கிறது. அதற்கு நீதிபதி பலியாகி இருக்கிறார். இந்த தீர்ப்பு வழக்கு தொடுத்தவர் ஒரு இஸ்லாமிய பெண். வாதாடியது கம்யூனிஸ்டு அரசு. அவர்கள் இந்த வழக்கை சரியாக கையாளவில்லை. இது கூட்டு சதியாக இருக்க வாய்ப்பு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கேரள அரசு கூறுகிறது. ஆனால், முல்லை–பெரியார் அணை விவகாரம், கோவில், பள்ளி வாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் இருக்க கூடாது என்பன உள்ளிட்ட உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் செயல்படுத்தப்படாமலே இருந்து வருகிறது. இந்து கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் கேரளா அரசு உறுதியாக இருக்கிறது.

மாற்று மதத்தை சேர்ந்த பெண்களை சபரிமலைக்குள் கொண்டு செல்ல போலீஸ் முயன்றது. இதை பக்தர்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இந்த மக்கள் போராட்டத்திற்கு அரசு செவிசாய்த்து, மறு சீராய்வு செய்து வழக்கை சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால் இந்த போராட்டம் தமிழகத்திலேயும் வெடிக்கும். ஆன்மிக சிந்தனையுள்ளவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். மசூதிக்குள் பெண்களை தொழுகை நடத்த கூட்டி செல்ல வேண்டும். இதை கேரள அரசு முன்னெடுத்தால் அந்த முயற்சிக்கு இந்து முன்னணி ஆதரவு அளிக்கும். வருகிற டிசம்பர் மாதம் 23, 24, 25 ஆகிய தேதிகளில் திருப்பூர் பொங்கலூரில் ஆன்மிக திருவிழா நடைபெறுகிறது.

முதல் நாள் கஜபூஜை, அஷ்வபூஜை, மீனாட்சி திருகல்யாணம், 2–வது நாள் 1008 பசுக்களை கொண்டு ‘கோ’ பூஜையும், ஆண்டாள் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 3–ம் நாள் 1 லட்சம் குடும்பங்களை வைத்து மகாலட்சுமி யாகம் நடத்தப்பட உள்ளது. இதில் 10 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த திருவிழாவிற்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக நவம்பர் மாதத்தில் இருந்து 4 ரதங்கள் வலம் வர உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்