எட்டயபுரம் அருகே பயங்கரம்: கள்ளக்காதலியை வெட்டிக்கொன்று, விவசாயி விஷம் குடித்து தற்கொலை
எட்டயபுரம் அருகே கள்ளக்காதலியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு, விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
எட்டயபுரம்,
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெங்கடாசலபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சூசை மரியான், பனையேறும் தொழிலாளி. இவருடைய மனைவி பாத்திமா மேரி (வயது 36). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் (50). விவசாயியான இவர் கரிமூட்டம் போடும் வேலையும் செய்து வந்தார். இவருடைய மனைவி சூசை பாத்திமா. இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக பாத்திமா மேரி, அந்தோணி ராஜின் தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த இரு குடும்பத்தினரும் அவர்களை கண்டித்தனர். இதனால் பாத்திமா மேரி, அந்தோணி ராஜின் தோட்டத்தில் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டு, மற்றொருவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். அந்தோணி ராஜிடம் பேசுவதையும் பாத்திமா மேரி தவிர்த்து வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணி ராஜ் அடிக்கடி பாத்திமா மேரியிடம் சென்று, என்னிடம் பேசவில்லையெனில், உன்னை கொலை செய்து விட்டு, நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி வந்தார். இதனை பாத்திமா மேரி பொருட்படுத்தாமல் வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் பாத்திமா மேரி மற்றொருவரின் தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் மாலையில் தோட்டத்தில் இருந்து தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்தோணி ராஜ் திடீரென்று பாத்திமா மேரியின் பின்பக்கமாக சென்று, அவரது கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க முயன்ற பாத்திமா மேரியின் வலது கை மணிக்கட்டு பகுதி துண்டானது.
இதில் பலத்த காயம் அடைந்த பாத்திமா மேரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அங்கிருந்து தப்பி சென்ற அந்தோணி ராஜ், ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, எட்டயபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கொலை செய்யப்பட்ட பாத்திமா மேரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கும், அந்தோணி ராஜின் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலியை கொலை செய்து விட்டு, விவசாயி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.