கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்; 4 பேர் கைது
கேரளா பகுதியில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கோட்டை,
தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் புளியரை போலீசார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ரகுபதி, செல்வமுருகன் ஆகியோர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
விசாரணையில், பிளாஸ்டிக் கழிவு மூட்டைகள் என்ற பெயரில் மருத்துவ கழிவு மற்றும் கோழி கழிவுகளை தமிழக பகுதிகளில் கொட்டுவதற்காக லாரியில் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மதுரை மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஆனந்தன் (வயது 36), கிளனர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஞானசேகரன் (38) மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணி (38), முத்துராஜ் (59) ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.