தொழிலாளி வெட்டிக்கொலை தப்பி ஓடிய அண்ணனுக்கு வலைவீச்சு

சங்கரன்கோவில் அருகே சொத்து தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-10-19 21:30 GMT
சங்கரன்கோவில், 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). இவர் அந்த பகுதியில் உள்ள கருப்பசாமி (24) என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வேல்முருகனுக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் அவர் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

இவருடைய அண்ணன் முத்துப்பாண்டி (45). இவர்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலம் தொடர்பாக 2 பேருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் முத்துப்பாண்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் செங்கல் சூளைக்கு சென்றார். பின்னர் முத்துப்பாண்டி, வேல்முருகன் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது அங்கு வேல்முருகன் தூங்கிக் கொண்டிருந்தார். உடனே முத்துப்பாண்டி, வேல்முருகனை தட்டி எழுப்பி வாக்குவாதம் செய்துள்ளார். தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், வேல்முருகனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே வேல்முருகனின் அலறல் சத்தம் கேட்ட கருப்பசாமி அங்கு ஓடிவந்தார். அப்போது வேல்முருகன் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே முத்துப்பாண்டி, கருப்பசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து கருப்பசாமி, கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துப்பாண்டியை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்