உளுந்தூர்பேட்டை அருகே: ஏரியில் மூழ்கி அக்காள்-தம்பி சாவு

உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி அக்காள்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-10-19 21:30 GMT
விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை தாலுகா பா.கிள்ளனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவருக்கு லாவண்யா (வயது 9) என்ற மகளும், நித்தீஷ் (7) என்ற மகனும் இருந்தனர். இவர்களில் லாவண்யா அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4-ம் வகுப்பும், நித்தீஷ் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த குழந்தைகளின் தாய் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் தந்தை ராமர் வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசித்து வருகிறார். இதனால் குழந்தைகள் லாவண்யா, நித்தீஷ் ஆகிய இருவரும் பா.கிள்ளனூரில் உள்ள பாட்டி சாந்தி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குழந்தைகள் இருவரும் பாட்டியை தேடி அருகில் உள்ள ஏரிக்கு சென்றனர். அப்போது ஏரியில், பள்ளம் தோண்டிய இடத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தனர். இதில் சிறிது நேரத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனிடையே குழந்தைகள் இருவரும் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவர்களது பாட்டி சாந்தி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் குழந்தைகளை தேடிப்பார்த்தனர். அப்போது ஏரிக்கு சென்று அங்கு தேங்கியிருந்த பள்ளத்தில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இறங்கி தேடிப்பார்த்தபோது லாவண்யாவும், நித்தீசும் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே இருவரின் உடலையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். குழந்தைகளின் உடலை பார்த்து பாட்டி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 2 குழந்தைகள், ஏரியில் மூழ்கி இறந்த சம்பவத்தினால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

மேலும் செய்திகள்