குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2018-10-20 03:00 IST
குலசேகரன்பட்டினம், 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, அம்மனை வழிபடுகின்றனர்.

கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் பக்தர்கள் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனர்.

ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். தசரா குழுக்களின் சார்பில் கரகாட்டம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதனால் தென் மாவட்டங்களில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் உள்ள சவுந்திரபாண்டிய நாடார்-தங்ககனி அம்மாள் கலையரங்கத்தில் தினமும் மாலையில் பக்தி சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை போன்றவையும், இரவில் பட்டிமன்றம், பாவைக்கூத்து, இன்னிசை நிகழ்ச்சி போன்றவையும் நடந்தது.

10-ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதனை முன்னிட்டு காலை முதல் மதியம் வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் காத்து இருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த திரளான பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாரானான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்தார். பின்னர் யானையாகவும், சிங்கமாகவும், சேவலாகவும் அடுத்தடுத்து உருமாறி போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். பின்னர் கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், குலசேகரன்பட்டினத்துக்கு வரும் சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டன. குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் பகுதியில் தற்காலிக பஸ் நிலையங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து, கோவிலுக்கு சென்றனர்.

குலசேகரன்பட்டினம் நகர எல்லையில் தசரா குழுவினர் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பக்தி கோஷங்களை எழுப்பியும் வந்தனர். வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர். பின்னர் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்ததை தரிசித்தனர். கடற்கரையில் தசரா குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கரகாட்டம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் தசரா குழுவினர் குலசேகரன்பட்டினத்துக்கு விடிய, விடிய வந்த வண்ணம் இருந்தனர். குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையோரம் நீண்ட தூரத்துக்கு பக்தர்களின் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில், சுமார் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

11-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன், கொடியிறக்கப்படும். பின்னர் அம்மன் காப்பு களைதல் நடைபெறும். தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைவார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

12-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர். 

மேலும் செய்திகள்