சிக்கிம் புரட்சி

இயற்கை விவசாயத்தை பின்பற்றுவதில் சிக்கிம் மாநிலம் மாபெரும் புரட்சி செய்து கொண்டிருக்கிறது.

Update: 2018-10-21 05:15 GMT
யற்கை விவசாயத்தை பின்பற்றுவதில் சிக்கிம் மாநிலம் மாபெரும் புரட்சி செய்து கொண்டிருக்கிறது. ரசாயனங்களுக்கு இடம் கொடுக்காமல் முழுக்க முழுக்க இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக இது திகழ்ந்து கொண்டிருக்கிறது. அங்கு பின்பற்றப்படும் இயற்கை வேளாண்மை உலகின் கவனத்தையும் ஈர்த்து விட்டது. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, சிக்கிம் மாநிலத்திற்கு எதிர்கால கொள்கைக்கான தங்க விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதன் மூலம் உலகின் ‘முதல் ஆர்கானிக் விவசாய மாநிலம்’ என்ற அந்தஸ்தை சிக்கிம் பெற்றிருக்கிறது. இந்த விருதுக்காக 25 நாடுகளில் இருந்து 51 இடங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் சிக்கிம் மாநிலம்தான் அனைத்து வகையிலும் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக பிரேசில், டென்மார்க், ஈக்வடாரிலுள்ள கொய்டோ நகரம் ஆகியவற்றுக்கு வெள்ளி விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா. அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மனித சமூகத்திற்கான மேம்பாட்டு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விவசாயத்திற்கு பயன்படுத்தும் மண்ணின் தரம், ரசாயன உரங்கள் பயன் படுத்துவதை தவிர்த்தல், காடு வளர்ப்பு, பூச்சி இனங்களை பாதுகாத்தல், பயிர் சாகுபடி முறைகள் போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுக்கான தகுதியை சிக்கிம் மாநிலம் 2003-ம் ஆண்டே பெற்று விட்டது. அப்போதே இயற்கை வேளாண்மைக்கு மாறப்போவதாக அறிவித்ததுடன் அதனை உடனடியாக செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தது. ரசாயன உரங்களை பயன்படுத்தவும் தடைவிதித்தது. 15 ஆண்டுகளாக அங்கு இயற்கை வேளாண்மைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. சிக்கிம் மாநிலத்தின் வேளாண் கொள்கையை உலக நாடுகள் பலவும் பாராட்டி வருகின்றன.

மேலும் செய்திகள்