மழையை வென்ற மகன்

பேய் மழை, பெரும் நிலச்சரிவுக்கு மத்தியில் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் ஷாஜிதா ஜபீல் பெற்றெடுத்த குழந்தை உற்சாகமாக கை கால்களை அசைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது.

Update: 2018-10-21 02:45 GMT
பேய் மழை, பெரும் நிலச்சரிவுக்கு மத்தியில் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் ஷாஜிதா ஜபீல் பெற்றெடுத்த குழந்தை உற்சாகமாக கை கால்களை அசைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது. கண்மை பூசி, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைக்கப்பட்டிருக்கும் அந்த ஆண் குழந்தை தாய் முகம் பார்த்து சிரித்து மகிழ்கிறது. குழந்தையை ஆசையோடு அணைத்துக்கொள்ளும் ஷாஜிதா, ‘இவன் கடவுளின் குழந்தை’ என்று கூறி சிலிர்க்கிறார். உண்மைதான், நிறைமாத கர்ப்பிணியான அவர் அதிரடியாக மீட்கப்பட்டதும், சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரசவம் ஆனதும் திகிலான உச்சகட்ட காட்சிகள்தான்!

“கேரளாவையே புரட்டிப்போட்ட மழை, அன்று எங்கள் வீடு இருக்கும் ஆலுவா பகுதியிலும் இடைவெளியில்லாமல் கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. நிறைமாதமாக இருந்த நான் இடி இடிக்கும்போதெல்லாம் என் வயிற்றுக்குள் இருந்த இவன் அதிர்ச்சியடையாமல் இருக்க, அடி வயிற்றில் கைவைத்துக்கொள்வேன். மழையும், இடியும் என் இதய துடிப்பை அதிகரிக்கச் செய்தது. பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர், யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. என் கணவரும் செய்வதறியாது திகைத்துப்போயிருந்தார். ‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் மருத்துவமனைக்கு சென்றுவிடு’ என்று என் உள்ளுணர்வு எச்சரித்துக்கொண்டே இருந்தது.

சிறிது நேரத்தில் சாலை நிறைந்து வீட்டிற்குள் தண்ணீர் வந்து நான் படுத்திருந்த கட்டிலை மூழ்கடித்துவிட்டது. உட னடியாக எல்ேலாரும் மொட்டைமாடிக்கு சென்றோம். என் கணவர் அங்கிருந்துகொண்டு யார் யாருக்கோ போன் செய்தார். மீட்புக்குழுவினரையும் அவர் தொடர்புகொண்டபடியே இருந்தார். ஆனால் எந்த பலனும் இ்ல்லை. எங்கள் கண்முன்னே அந்த பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கிவிட்டது.

அப்போது தூரத்தில் மீட்பு ஹெலிகாப்டர் வரும் சத்தம் கேட்டது. நாங்கள் முழுக்க நனைந்தபடியே அவர்களது கவனத்தை ஈர்க்க பலவழிகளில் முயற்சித்தோம். அவர்களை நோக்கி துணியை அசைத்தோம். கூச்சல்போட்டோம். இறுதியில் அலறி அவர்களது கவனத்தை ஈர்க்க முயற்சித்ேதாம். ஆனால் பேய் மழைக்குள் எங்கள் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை. எங்களை கடந்து ஹெலிகாப்டர் போய்விட்டது. சிறிது நேரம் கழித்து, கடவுள் அருளால் மீண்டும் எங்கள் அருகில் வந்தது. என்னை பார்த்ததும் பெல்ட் மூலம் தூக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். என்னை காப்பாற்றி கொச்சி ராணுவ மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள். அங்குதான் என் மகன் பிறந்தான்..” என்று ஷாஜிதா சொல்லும்போது, தாய் அன்று அனுபவித்த இன்னல்களுக்கு ஆறுதல் சொல்வதுபோல் குழந்தை அவர் முகம் பார்த்து சிரிக்கிறது. “எந்த வலியையும் இந்த சிரிப்பு போக்கிவிடும்” என்றபடி, அதன் பிஞ்சு முகத்தில் இதழ் பதித்து முத்தம் கொடுக்கிறார், ஷாஜிதா.

மேலும் செய்திகள்