பழனி பகுதிகளில் 2 வீடுகளில் நகைகள் திருட்டு

பழனி பகுதிகளில் 2 வீடுகளில் புகுந்து 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2018-10-17 21:45 GMT
பழனி, 


பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி திருநகர் பகுதியில் உள்ள ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் கவுஸ். இவருடைய மகன் அப்துல்கலாம் (வயது 47). மெக்கானிக். நேற்று முன்தினம் இவர், குடும்பத்தினருடன் வீட்டு மாடியில் தூங்கினார். அடுத்த நாள் காலையில் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.500-ஐ மர்ம நபர்கள் திருடி சென்றதையறிந்து அப்துல்கலாம் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் பழனி நகர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அப்துல்கலாம் குடியிருக்கும் வீட்டின் எதிர்புறம் உள்ள வீட்டில் கண்காணிப்பு கேமரா இருப்பது தெரியவந்தது. உடனே அந்த கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், முகத்தை துண்டால் மறைத்தபடி 2 பேர் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் சத்திரப்பட்டி அருகே உள்ள தாசரிப்பட்டியை சேர்ந்தவர் காளியப்பன் (45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் சத்திரப்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார். முன்னதாக வீட்டை பூட்டிவிட்டு சாவியை முன்பகுதி ஜன்னல் அருகே மறைத்து வைத்துவிட்டு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது, கதவின் பூட்டு திறந்த நிலையில் இருந்ததை பார்த்து பதற்றமடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றதையறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் சத்திரப்பட்டி போலீசில் காளியப்பன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காளியப்பன் வீட்டின் முன்பகுதியில் சாவியை வைத்து சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர், அவர் வேலைக்கு சென்றதும் அந்த சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்