குடகு மாவட்டம் தலைக்காவிரியில் காவிரி தீர்த்த உற்சவ விழா

குடகு மாவட்டம் தலைக்காவிரியில் காவிரி தீர்த்த உற்சவ விழா நடந்தது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

Update: 2018-10-17 23:51 GMT
குடகு,

கர்நாடகம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும், விவசாயத்திற்கான தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்து வருவது காவிரி ஆறு. இந்த ஆறு கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகி மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்கள் வழியாக தமிழ்நாடு ஒகேனக்கல்லை சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து பாய்ந்தோடி திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கரைபுரண்டு ஓடி கடலில் கலக்கிறது.

கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையையும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தேவையையும் தீர்த்து வைத்து வரும் காவிரி ஆற்றை போற்றும் விதமாக காவிரி ஆற்றின் பிறப்பிடமான குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா தலைக்காவிரியில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 17-ந் தேதி ‘காவிரி தீர்த்த உற்சவ விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது.

அங்கு அமைந்துள்ள காவிரித்தாய் கோவிலில் வீற்றிருக்கும் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்னர், கோவில் முன்பு அமைந்திருக்கும் கல்யாணி குளத்தில் வைத்து காவிரித்தாய்க்கு அபிஷேகம் செய்து தீர்த்த உற்சவம் நடைபெறும். அப்போது திரளான பக்தர்கள் காவிரி தாயை வழிபட்டு, கல்யாணி குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்துச் செல்வது வழக்கம். இங்கு அமைந்திருக்கும் கல்யாணி குளத்தில் எப்போதும் தண்ணீர் வற்றாது என்பது சிறப்புக்குரிய விஷயமாகும்.

இப்படி பல்வேறு சிறப்புமிக்க காவிரி தீர்த்த உற்சவ விழா இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் 17-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை காவிரி தீர்த்த உற்சவ விழா நடந்தது.

இதையொட்டி காவிரி தாய்க்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. மேலும் கல்யாணி குளத்திற்கும் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதையடுத்து சரியாக 6.43 மணியளவில் காவிரி தாய்க்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பல்லக்கில் வைத்து காவிரித்தாயை கல்யாணி குளத்திற்கு கொண்டு வந்த அர்ச்சகர்கள், அம்மனுக்கு கல்யாணி குளத்தில் உள்ள நீரால் அபிஷேகம் செய்து தீர்த்த உற்சவத்தை நடத்தினர்.

இதில் முதல்-மந்திரி குமாரசாமி, மந்திரி சா.ரா.மகேஷ் மற்றும் அரசு அதிகாரிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரித்தாயை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த குடங்கள், கேன்கள் ஆகியவற்றில் கல்யாணி குளத்தில் இருந்து தீர்த்தத்தை பிடித்துச் சென்றனர்.

காவிரி தீர்த்த உற்சவ விழாவையொட்டி தலைக்காவிரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குடகு மாவட்டம் இந்த ஆண்டு வரலாறு காணாத மழையை சந்தித்து பலத்த பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததால் காவிரி தீர்த்த உற்சவ விழாவில் வழக்கத்தை விட குறைவான பக்தர்களே கலந்து கொண்டிருந்தனர். மேலும் விழா எளிமையாகவே நடத்தப்பட்டது.

குடகு மாவட்டத்தில் ஏற்பட்டிருந்த மண்சரிவு காரணமாக ஏராளமான பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனாலும் பக்தர்களின் வருகை குறைந்திருந்தது.

விழா முடிந்ததும் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கு வந்தால் என்னுடைய முதல்-மந்திரி பதவி பறிபோய்விடும் என்று பலர் கூறுகிறார்கள். நான் இங்கு வந்த பின்புதான் முதல்-மந்திரி ஆனேன். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார். இங்குள்ள காவிரித்தாய் குடகு மாவட்ட மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்புகிறேன். ஏற்கனவே குடகு மாவட்ட மக்கள் பெரும் துயரை சந்தித்துவிட்டனர். அவர்களை அத்துயரில் இருந்து மீட்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. அதை சிறப்பாக செய்வேன்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

காவிரி தீர்த்த உற்சவ விழாவையடுத்து பாகமண்டலாவில் உள்ள பங்கண்டேஸ்வரர் கோவிலிலும், அங்கு 3 ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்