தொல்லியல் துறைக்கு தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

நடப்பு ஆண்டில் இதுவரை தொல்லியல் துறைக்கு தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.;

Update: 2018-10-17 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடித்துறை, புதுடெல்லி தேசிய சுவடிகள் இயக்கம் ஆகியவை சார்பில் சுவடிகள் பாதுகாப்பு மையம் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு சுவடிகள் பாதுகாப்பு மையத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். உருவாக்கிய தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மிக முக்கிய அமைப்பாக அண்ணா நூலகத்தில் இருப்பது போல, சுவடிகள் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சித்த மருத்துவம் சார்ந்த சுவடிகள் அதிக அளவில் உள்ளன.

பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட விலைமதிப்பற்ற ஓலைச்சுவடிகள் இடம் பெற்றுள்ளன. மத்தியஅரசு உதவியுடன் தொடங்கப்பட்ட 3-வது மையம் ஆகும். இதற்காக தேசிய சுவடிகள் இயக்கம் ரூ.21 லட்சம் வழங்கியுள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் ஓலைச்சுவடிகள் இருப்பது தமிழகத்தில் தான். தமிழகத்தில் உள்ள வரலாற்று நினைவு சின்னங்களை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அருங்காட்சியகம், கலைக்கூட மேம்பாட்டுக்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்தது. தமிழக தொல்லியல்துறைக்கு நடப்பு ஆண்டில் இதுவரை தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் 62 ஆயிரம் ஒலைச் சுவடிகள் உள்ளன.

மொழிக்கான பல்கலைக் கழகங்களில் முதன்மையான பல்கலைக்கழகமாக தமிழ்ப்பல்கலைக்கழகம் திகழ்கிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இதற்கு முன்பு இருந்து, இப்போது இல்லாத துறைகளை கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். கடல் சார்ந்த தொல்லியல்துறை முன்பு இருந்தது. அந்த துறையை கொண்டு வரக்கூடிய உன்னத நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் தொல்லியல் துறையில் நிறைய பேர் தமிழர்கள் தான் உள்ளனர். கீழடியில் 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக கடந்த 3-ம் கட்ட ஆய்வில் 1,850 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 100 ஏக்கரில் 2 ஏக்கரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 8,800 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழர்களின் தொன்மையான தொழில் மற்றும் நகர்ப்புற நாகரீகம் வெளிப்பட்டுள்ளது.

தொழில், பண்பாடு சார்ந்த இடமாக தான் உள்ளது. மதம் சார்ந்த இடத்திற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. முதல் 2 கட்டங்களாக நடந்த ஆய்வுகள் தொடர்பாக ஆய்வுக்குழுவினர் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். 3-ம் கட்ட ஆய்வு தொடர்பாக ஒரு மாதத்தில் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவதாக ஆய்வுக்குழுவினர் கூறியுள்ளனர். கீழடியில் அகழ் வைப்பகம் வைப்பதற்கு மத்திய அரசிடம் ரூ.2 கோடி கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தமிழ் வளர்ச்சித்துறை, கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாடு பொன்விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா தமிழ்ப்பல்கலைக்கழக பேரவை கூடத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் குணசேகரன் வரவேற்றார். இதில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் துரைக்கண்ணுவும், இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பாண்டியராஜனும் தங்கப்பதக்கத்தையும், பரிசுகளையும் வழங்கினர். மொத்தம் 67 பேருக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் விஜயராகவன், தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், பால்வள தலைவர் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்ப்பல்கலைக்கழக பதிவாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்