சேதராப்பட்டில் தைலமரங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பல்; பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்

சேதராப்பட்டு சந்திராயன் குளக்கரையில் இருந்த தைலமரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம கும்பலை பொதுமக்கள் தடுத்து நிறுத்தனர்.

Update: 2018-10-17 22:30 GMT

வில்லியனூர்,

புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த சேதராப்பட்டில் சந்திராயன் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி ஏராளமான மரங்கள் உள்ளன. இந்தநிலையில் குளத்தை தூர்வார டெண்டர் விடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே குளத்தின் கரையையொட்டி 20–க்கும் மேற்பட்ட தைல மரங்களை எந்திரத்தால் வெட்டி கடத்த ஒரு கும்பல் முயற்சித்தது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டு சென்றனர். அவர்கள் அந்த கும்பலிடம் சென்று நீங்கள் யார்? மரங்களை எதற்காக வெட்டுகிறீர்கள்? மரங்களை வெட்ட உங்களுக்கு யார் அனுமதி வழங்கினார்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளிக்க முடியாமல் அந்த கும்பலை சேர்ந்தவர் திகைத்து நின்றனர்.

இதனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. அதனால் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த கும்பல் அங்கிருந்து வேகவேகமாக புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மரங்களை வெட்டிய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்