அடிப்படை வசதிகளைகூட நிறைவேற்ற முடியாமல் நிதி பற்றாக்குறையால் அரசு தவிக்கிறது - ஓம்சக்தி சேகர் புகார்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, அடிப்படை திட்டங்களை கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு நிதி பற்றாக்குறை என புதுவை அரசு தவிக்கிறது என்று அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-10-17 23:15 GMT

புதுச்சேரி,

புதுவை நெல்லித்தோப்பு லெனின் வீதியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.தி.மு.க.வின் 47–ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, 100 அடி ரோட்டில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது ஓம்சக்தி சேகர் பேசியதாவது:–

எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை இரும்புக்கோட்டையாக மாற்றிகாட்டி அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக ஜெயலலிதா விளங்கினார். அடுத்தடுத்து 2 முறை கழகத்தை ஆட்சியில் அமர்த்தி சாதனை புரிந்தார்.

இப்போது அவரது வழியில் கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கழகத்தை வழிநடத்தி மிக சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர். ஆனால் புதுச்சேரியில் தி.மு.க.வின் துணையோடு ஆட்சி நடத்திவரும் காங்கிரஸ் கட்சி எந்த வளர்ச்சி திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.

கவர்னர் மீது குற்றம் சுமத்தி அரசியல் செய்துவரும் முதல்–அமைச்சர் நாராயணசாமி வளர்ச்சிப் பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். தினந்தோறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. எனவே உடனடியாக உள்துறை அமைச்சகம் சட்டம்– ஒழுங்கு குறித்து ஆய்வு செய்யவேண்டும்.

அரசு பல் மருத்துவக்கல்லூரியை நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி ஜிப்மர் நிர்வாகத்தோடு இணைக்க புதுவை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பல் மருத்துவ கல்லூரியை அரசே நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

புதுவை மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, அடிப்படை திட்டங்களை கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு நிதி பற்றாக்குறை என பல்வேறு சிக்கல்களில் புதுச்சேரி அரசு தவித்து வருகிறது.

அரசு பல் மருத்துவக்கல்லூரியை மத்திய அரசிடம் ஒப்படைக்க கோரிக்கை வைத்துள்ள நாராயணசாமி, தன்னுடைய ஆட்சி அதிகாரத்தையும் மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டால் புதுவை மாநிலம் வளர்ச்சியடையும்.

இவ்வாறு ஓம்சக்தி சேகர் பேசினார்.

மேலும் செய்திகள்