சாயல்குடி அருகே அரசு பஸ்– கார் மோதல்; 3 வாலிபர்கள் பலி

சாயல்குடி அருகே அரசு பஸ்–கார் மோதிக்கொண்ட விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.;

Update: 2018-10-17 23:15 GMT

சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மாயாகுளம் பாரதிநகரை சேர்ந்தவர்கள் அருண்(வயது 27), உமயபாலா(26), விஜயராஜ்(22), கிருஷ்ணகுமார்(23), நவீன்(18), உமய கணேஷ்(28), புவனேஷ்வரன்(16). இவர்கள் 7 பேரும் காரில் சிவகாசி சென்று பட்டாசுகள் வாங்கிக்கொண்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கீழச்செல்வனூர் போலீஸ் நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இவர்கள் கார் வந்தபோது, ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி ஒரு அரசு பஸ்சும் வந்தது. அந்த பஸ்சும், காரும் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்த அருண், உமயபாலா, விஜயராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

மேலும் கிருஷ்ணகுமார், நவீன், உமயகணேஷ், புவனேஷ்வரன் மற்றும் அரசு பஸ் டிரைவர் இதம்பாடல் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்(58) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், கீழச்செல்வனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பாக கீழச்செல்வனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்