சபரிமலை அய்யப்பன் கோவில் விதிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சபரிமலை அய்யப்பன் கோவில் விதிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.;

Update: 2018-10-17 23:00 GMT
மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாரத்துக்குட்பட்ட அத்தியூர் கிராமத்தில் நேற்று நலவாழ்வு மையம் திறப்பு விழாவில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அய்யப்பன் கோவில்கள் உள்ளன. இதில், ஒன்றில் கூட பெண்கள் வரக்கூடாது என சொல்லவில்லை. அதே சமயம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு என உள்ள சில விதிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும். கோவிலுக்குள் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவிப்பது பக்தர்களது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

திருச்சி விமான நிலைய விபத்துக்கு, விமானியின் கவனக்குறைவு காரணமா என தெரியவில்லை. அவர் விபத்து நிகழ்ந்த பின்னரும் விமானத்தை சாதுர்யமாக இயக்கி, மும்பையில் சென்று தரையிறக்கியிருக்கிறார். விமானியின் திறமையை பாராட்ட வேண்டும். இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்.

வைரமுத்து, சின்மயி பிரச்சினையில் எங்களுக்கு துளிகூட உடன்பாடு இல்லை. சம்பவம் நடந்து 10, 15 ஆண்டுகள் கழித்து புகார் சொல்வது ஏற்புடையது அல்ல. இப்படி புகார் சொல்பவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். தமிழக அமைச்சர்கள், முதல்-அமைச்சர் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணை நடத்தி அதன் முடிவுக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மை பாரத திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பது குறித்து தெளிவாக விவரம் தெரிவித்தால், அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கு தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், குரும்பபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற விழாவில் நலவாழ்வு மையத்தினை, மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், மக்கள் நலவாழ்வு மையம் மூலம் கர்ப்பகால மற்றும் மகப்பேறு சேவைகள், குழந்தைகள் வளர் இளம் பருவ நலச்சேவைகள் உள்பட 12 வகையான சுகாதார நல சேவைகளும், 40 வகையான ஆய்வக பரிசோதனைகளும் அளிக்கப்படுகிறது. “அனைவருக்கும் நலவாழ்வு” என்பது அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்து சுகாதார நல சேவைகள் பொதுமக்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே இலவசமாக தரமான வகையில் வழங்குவதே இதன் நோக்கமாகும் என்று கூறினார். நிகழ்ச்சியில், மருத்துவ பணிகளின் இணை இயக்குனர் விஜயகுமார், சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் நிர்மல்சன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் பிரபு மற்றும் மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்