அம்பத்தூரில் இரும்பு குழாய்கள் வாங்கி ரூ.35 லட்சம் மோசடி; 2 பேர் கைது
அம்பத்தூரில், இரும்பு குழாய்கள் வாங்கி ரூ.35 லட்சம் மோசடி செய்த 2 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவர்களின் தந்தையை தேடி வருகின்றனர்.
அம்பத்தூர்,
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன்(வயது 58). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இரும்பு குழாய்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரிடம், கடந்த 2017–ம் ஆண்டு மதுரை திருமாவூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய மகன்கள் செந்தில்குமார்(32), ராஜ்குமார்(30) ஆகியோர் ரூ.52 லட்சத்துக்கு இரும்பு குழாய்கள் வாங்கினர். அதற்காக முதல் கட்டமாக ரூ.17 லட்சம் மட்டுமே கொடுத்து விட்டு மீதமுள்ள ரூ.35 லட்சத்தை ஒரு வருடத்தில் தருவதாக கூறினார்கள்.
இவர்கள் பெரிய நிறுவனங்களுக்கு இரும்பு குழாய்கள் மூலம் மேற்கூரை அமைத்து தரும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் கோவிந்தராஜனும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
ஆனால் ஒரு வருடம் ஆகியும் கோவிந்தராஜனுக்கு தரவேண்டிய ரூ.35 லட்சத்தை தராமல் இழுத்தடித்து வந்தனர். இதுபற்றி அவர் கேட்டபோது, கடந்த செப்டம்பர் மாதம் ரூ.35 லட்சத்துக்கு காசோலை கொடுத்தனர். ஆனால் வங்கியில் பணம் இல்லாமல் அந்த காசோலை திரும்பி வந்தது.
இதையடுத்து கோவிந்தராஜன், தனக்கு தரவேண்டிய ரூ.35 லட்சத்தை தரும்படி பலமுறை கேட்டும் அவர்கள் தராமல் காலம் கடத்தி வந்தனர். இதுபற்றி அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜன் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இரும்பு குழாய்கள் வாங்கி ரூ.35 லட்சத்துக்கு காசோலை கொடுத்து மோசடி செய்ததாக செந்தில்குமார், ராஜ்குமார் இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இவர்களின் தந்தை கிருஷ்ணமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.