வளசரவாக்கத்தில், ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம்: முதியவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேர் கைது

வளசரவாக்கத்தில், முதியவரிடம் செல்போன் பறித்துவிட்டு, ஸ்கூட்டரில் அவரை தரதரவென இழுத்துச்சென்ற வழக்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-10-17 23:30 GMT
பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு நெற்குன்றம், மேட்டுக்குப்பம், புவனேஷ்வரி நகரைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (வயது 66). இவர், குன்றத்தூரை அடுத்த கோவூரில் உள்ள விறகு கடையில் வேலை செய்து வருகிறார். விடுமுறை நாட்களில் கருப்பட்டி வியாபாரம் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று சென்னை வளசரவாக்கம், மெஜஸ்டிக் காலனியில் உள்ள தனது நண்பர் வீட்டில் கருப்பட்டி கொடுத்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றார்.

அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 மர்மநபர்கள், முகவரி கேட்பதுபோல் நடித்து ஜெயபாண்டியன் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றார். உடனே அவர், செல்போனை மீட்க மர்மநபர்களை பிடிக்க முயன்றார்.

ஆனால் மர்மநபர்கள் வேகமாக சென்றதால் ஸ்கூட்டரில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு பின்னாலேயே ஓடிய ஜெயபாண்டியன் நிலைதடுமாறி விழுந்தார். ஆனாலும் மர்மநபர்கள், அவரை சிறிதுதூரம் ஸ்கூட்டரில் தரதரவென இழுத்தவாறு வேகமாக தப்பிச்சென்று விட்டனர்.

மர்மநபர்களை பிடிக்க முடியாமல் ஸ்கூட்டரில் இருந்த தனது பிடியை ஜெயபாண்டியன் விட்டார். ஸ்கூட்டரில் இழுத்துச்செல்லப்பட்டதால் அவரது உடலில் காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சிவா (19) மற்றும் அவருடைய நண்பர்களான 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவர் மற்றும் 18 வயது கல்லூரி மாணவர் என 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், ஜெயபாண்டியனிடம் இருந்து செல்போனை பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். கைதான சிவா, புழல் சிறையிலும் மற்ற 2 பேரும் கெல்லீஸ் சீர்த்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்