தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்தவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை

தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.;

Update: 2018-10-17 09:22 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி கலவரத்தில் காயம் அடைந்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

சி.பி.ஐ. விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது நடந்த தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர்.

இது தொடர்பாக சென்னை சி.பி.ஐ. 15 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் தலைமையில் துணை சூப்பிரண்டு ரவி மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 13-ந் தேதி முதல் தூத்துக்குடியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவணங்கள்

சி.பி.ஐ. அதிகாரிகள் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்து சென்றனர். சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்த துணை தாசில்தார், தாசில்தார், வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரை சம்பவ இடத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். அன்று நடந்த சம்பவங்களை துணை தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேரில் விளக்கி கூறினர். எந்த பகுதி வழியாக மக்கள் வந்தார்கள், போலீசார் எவ்வாறு தடுத்தனர்.

தடியடி, துப்பாக்கி சூடு எப்படி நடந்தது? என்று செயல்முறை விளக்கம் போன்று விளக்கி கூறினர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக கலெக்டர் அலுவலக உயர் அதிகாரிகளிடமும் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், உறவினர்களை நேரில் சந்தித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காயம் அடைந்தவர்களிடம் விசாரணை

இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து விசாரித்தார்கள். அதேபோல் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள், எத்தனை பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, காயங்களின் தன்மை உள்ளிட்டவை குறித்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

மேலும் முன்னாள் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோருக்கும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக தூத்துக்குடியில் தனியாக அலுவலகத்தை அமைக்க இருப்பதாக தெரிகிறது. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்