தாமிரபரணி மகாபுஷ்கர விழாவில் துப்புரவு பணியாளர்களுக்கு முதல் மரியாதை

தாமிரபரணி மகாபுஷ்கர விழாவில் ஆற்றுப்பகுதியை தூய்மையாக பராமரித்த மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது.

Update: 2018-10-17 08:06 GMT
நெல்லை, 

தாமிரபரணி மகாபுஷ்கர விழாவில் ஆற்றுப்பகுதியை தூய்மையாக பராமரித்த மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டது.

மகா புஷ்கர விழா

தாமிரபரணி மகாபுஷ்கர விழா நெல்லையில் குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறை, தைப்பூசமண்டப படித்துறை, வண்ணார்பேட்டை குட்டத்துறை படித்துறை, மணிமூர்த்திஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவில் படித்துறை, எட்டெழுத்துபெருமாள் கோவில் கோசாலை ஜடாயூ படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் வந்து தினமும் புனித நீராடி வழிபாடு நடத்தி செல்கிறார்கள். இந்த படித்துறைகளில் குளிக்க வருகின்ற பக்தர்களுக்கு மாநகராட்சி சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. அங்காங்கே கிடக்கும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

முதல் மரியாதை

இப்படி குப்பைகளை அள்ளி ஆற்றுப்பகுதியை தூய்மையாக வைத்து இருந்த துப்புரவு பணியாளர்களுக்கு நேற்று இரவில் நெல்லை மணிமூர்த்திசுவரம் உச்சிஷ்ட விநாயகர் கோவில் படித்துறையில் நடந்த மகா ஆராத்தியின் போது மாலை அணிவித்து முதல் மரியாதை அளிக்கப்பட்டது. இதில் பக்தானந்த சுவாமி, நெல்லை மண்டல அண்ணா பல்கலைக்கழக டீன் சக்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு வேன்

தைப்பூசமண்டப படித்துறையில் தாமிரபரணி மகா புஷ்கரவிழா விழிப்புணர்வு வேன் வந்து நின்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதில் தாமிரபரணி ஆற்றில் பூங்குளத்தில் தொடங்கி வருவது போலவும், அகஸ்தியரும், அவருடைய மனைவி லோகமுத்திரை அம்பாளும் நின்று பார்ப்பது போலவும் சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்