ஜியோமி டி.வி. அறிமுகம்

ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள சீன நிறுவனமான ஜியோமி இந்தியாவைச் சேர்ந்த டிக்சன் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து டி.வி. தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

Update: 2018-10-17 04:51 GMT
எம்.ஐ. எல்.இ.டி. டி.வி.க்கள் திருப்பதியில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக 32 அங்குலம் மற்றும் 49 அங்குல எம்.ஐ. எல்.இ.டி. டிவிக்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

எம்.ஐ. டி.வி. 4 சி புரோ (32 அங்குலம்), எம்.ஐ. டி.வி. 4ஏ புரோ (49 அங்குலம்) டி.வி.க்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெங்களூருவில் கடந்த மாதம் நடந்த ஸ்மார்ட்டர் லிவிங் எனும் கண்காட்சியில் 3 டி.வி.க்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது. அவற்றில் இரண்டு டி.வி.க்களை இப்போது விற்பனைக்கு அனுப்பி உள்ளது. முதலில் இவை அமேசானின் பிரைம் உறுப்பினர்களுக்கு விற்கப்படும். பிறகு மற்ற வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 10 முதல் விற்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் 32 அங்குல டி.வி.யின் விலை ரூ. 14,999 ஆகும். மற்றொரு மாடலான 49 அங்குல டி.வி. விலை ரூ. 29,999 ஆகும். இவை இரண்டுமே கருப்பு வண்ணத்தில் வந்துள்ளன. அமேசான், எம்.ஐ. உள்ளிட்ட இணையதளங்களில் இவற்றை வாங்க முடியும். சுவற்றில் மாட்டும் வசதி, குரோம் காஸ்ட் ஆகியவற்றுடன் இவை வந்துள்ளன. இவற்றில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளதால் மிகச் சிறப்பாக பாடல்களைக் கேட்டு மகிழ முடியும். 2 யு.எஸ்.பி, 2.0 போர்ட், 3 ஹெ.ச்.டி.எம்.ஐ, 1 எதர்நெட் போர்ட், 1 ஆடியோ விஷுவல் போர்ட், 1 இயர்போன் போர்ட், புளூடூத் வி 4.2, சிங்கிள் பாண்ட் வை-பை ஆகிய வசதிகள் உள்ளன. இதில் குரோம்காஸ்ட் உள்ளதால் கூகுள் அளிக்கும் பிளே ஸ்டோர் வசதியைப் பெறலாம். கூகுள் பிளே மியூசிக், யூ- டியூப் ஆகியவையும் இதில் உள்ளன. எம்.ஐ. அளிக்கும் ரிமோட் கூட குரல் வழி கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் 8 ஆலைகள் உள்ளன. இவற்றில் 6 ஆலைகளில் ஸ்மார்ட்போன் தயாரிக்கப்படுகிறது. ஒரு ஆலையில் பவர் பேங்க் தயாரிக்கப்படுகிறது. பாக்ஸ்கான் மற்றும் ஹிபாட் டெக்னாலஜஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இவற்றை ஜியோமி தயாரிக்கிறது. இவை அனைத்துமே ஸ்ரீ சிட்டி, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் நொய்டாவில் உள்ளன.

மேலும் செய்திகள்