கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அன்சர்மீரான் சென்னை கோர்ட்டில் ஆஜர்: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அன்சர் மீரான் சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக அவர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
கடலூர் முதுநகர்,
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் அன்சர்மீரான் (வயது 29). இவர், சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கு கைதிகளுக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் கடலூர் மத்திய சிறையை தகர்த்து, அன்சர் மீரானை கடத்த பயங்கரவாத அமைப்பு சதி திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அன்சர் மீரான் சக கைதிகளிடம், தான் கடலூர் சிறையில் இருந்து தப்பி சென்று விடுவேன் என்று கூறியுள்ளார். உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே பாதுகாப்பு கருதி, கடந்த 3-ந் தேதி காணொலி காட்சி மூலம் அன்சர் மீரானை சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். அப்போது, 16-ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இவருடை காவல் நீட்டிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. எனவே கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கடலூர் சிறையில் இருந்த அன்சர் மீரானை நேற்று காலை 9.50 மணிக்கு வேனில் ஏற்றினர். பின்னர் அவர், சென்னை பூந்தமல்லி தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 29-ந் தேதி வரை காவலை நீட்டித்து, வழக்கை ஒத்தி வைத்தார். இதனை தொடர்ந்து அன்சர் மீரான், மீண்டும் பலத்த பாதுகாப்புடன் கடலூருக்கு அழைத்து வரப்பட்டு, மாலை 6.35 மணிக்கு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.