துணி உற்பத்தி குறைந்ததால் விசைத்தறி நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

விசைத்தறி துணி உற்பத்தி குறைந்ததால் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.;

Update: 2018-10-16 21:45 GMT
ஈரோடு, 


ஈரோடு வீரப்பன்சத்திரம், அசோகபுரம், சூளை, மாணிக்கம்பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் 20 ஆயிரம் விசைத்தறிகளில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி- சேலைகளும், சீருடைகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. 30 ஆயிரம் விசைத்தறிகள் மூலம் ரயான், காட்டன், காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள் சாயமேற்றுவதற்காக வடமாநிலங்களில் உள்ள சாய தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளதால் துணி உற்பத்தியில் விசைத்தறி நெசவாளர்கள் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளனர். 

இந்த நிலையில் வடமாநிலங்களில் சாயமேற்றும் தொழில் சரிவர நடக்காததால் ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் தேக்கமடைந்து உள்ளன. இதனால் விசைத்தறிகளில் துணிகளின் உற்பத்தி குறைக்கப்பட்டது. எனவே நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ரயான் துணிகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தினமும் சுமார் ஒரு கோடி மீட்டர் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக ரயான் துணி உற்பத்தி தீவிரமாக நடந்து வந்தது. இதனால் உற்பத்தி அளவும் கணிசமாக உயர்ந்தது. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள் வடமாநிலங்களில் சாயமேற்றப்பட்டு மற்ற பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநிலங்களில் சாய தொழிலில் ஈடுபட்டு இருந்த 80 ஆயிரம் தொழிலாளர்கள் திடீரென நீக்கப்பட்டனர். இதனால் அந்த தொழில் ஸ்தம்பித்தது. எனவே ரயான் துணிகள் ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தேக்கம் அடைந்துவிட்டது. ஒருசில இடங்களில் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

மேலும், ரூ.31-க்கு விற்கப்பட்டு வந்த 2-வது ரக துணி ஒரு மீட்டர் ரூ.28-க்கும், ரூ.36-க்கு விற்கப்பட்ட முதல் ரக துணி ரூ.33-க்கும் வீழ்ச்சி அடைந்து விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை வர உள்ளதால் நெசவாளர்களுக்கு போனஸ், கூலி வழங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்