திருப்பூரில் தாறுமாறாக சென்று கடைக்குள் புகுந்த கார்

திருப்பூரில் தாறுமாறாக சென்று இறைச்சி கடைக்குள் கார் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-16 21:30 GMT
திருப்பூர், 

திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த 2 மின்கம்பங்கள் மீது கார் மோதியது. இதில் அந்த மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்தன.

தொடர்ந்து கார் அந்த பகுதியில் இருந்த இறைச்சி கடைக்குள் புகுந்தபடி நின்றது. அதிர்ஷ்டவசமாக கடைக்குள் யாரும் இல்லை. இதன் காரணமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டி வந்தது திருப்பூர் ஏ.டி.காலனி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அந்த சிறுவன் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனைத்தொடர்ந்து அந்த சிறுவனை கடுமையாக எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதி எப்போதும் ஆட்கள் நடமாட்டம் நிறைந்து காணப்படும். நள்ளிரவில் கார் தாறுமாறாக ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் நடைபெறவில்லை. 

மேலும் செய்திகள்