சேலம்: மின்பகிர்மான வட்டத்தில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்க தானியங்கி கட்டணமில்லா சேவை - 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது

சேலம் மின்பகிர்மான வட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், மின்தடை குறித்து புகார் தெரிவிக்க தானியங்கி கட்டணமில்லா சேவை வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Update: 2018-10-16 23:30 GMT
சேலம்,

தானியங்கி கட்டணமில்லா சேவை தொடர்பாக, சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஆர்.மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மின் பகிர்மான வட்டத்தில், சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மின்நுகர்வோர்களுக்கு மட்டும் செயல்பட்டு வந்த தானியங்கி மின் தடை பழுது நீக்கும் மையத்தின் கட்டணமில்லா சேவை (1912), சேலம் மின் பகிர்மான வட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வருகிற 22-ந் தேதி முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

அதன்படி சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகள், மல்லமூப்பம்பட்டி, கருப்பூர், முத்துநாயக்கன்பட்டி, வெள்ளாளப்பட்டி, ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம், மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, வெள்ளாளகுண்டம், கூட்டாத்துப்பட்டி, சேசன்சாவடி, வலசையூர், அரியானூர், வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், அளவாய்பட்டி, மல்லூர், பனமரத்துப்பட்டி, வேம்படி தாளம், இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, கே.கே.நகர், இடங்கணசாலை, வாழப்பாடி, பேளூர், தும்பல், கருமந்துறை, புத்திரகவுண்டன்பாளையம், பெத்த நாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், சிங்கபுரம், மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, மல்லியக்கரை, கீரிப்பட்டி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, ஆத்தூர் நகராட்சி, நரசிங்கபுரம், தாண்டவராயபுரம், கடம்பூர், காட்டுக்கோட்டை, சாத்தப்பாடி, மஞ்சினி, தலைவாசல், தேவியாக்குறிச்சி, சிறுவாச்சூர், மணிவிழுந்தான்காலனி, புளியங்குறிச்சி, ஆறகளூர், காமக்காபாளையம், வீரகனூர், கெங்கவல்லி, தெடாவூர் மற்றும் கூடமலை பகுதிகள் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் அனைத்து நுகர்வோர்களுக்கும் வருகிற 22-ந் தேதி முதல் இந்த சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த பகுதிகளில் வசிக்கும் மின் நுகர்வோர்கள், தங்களது மின் இணைப்பில் மின்தடை ஏற்பட்டால் கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மின் தடையை நிவர்த்தி செய்து கொள்ளலாம். குறிப்பாக பி.எஸ்.என்.எல். செல்போன் மற்றும் தரைவழி இணைப்பு வைத்துள்ளவர்கள் 1912 என்ற எண்ணையும், மற்ற செல்போனில் இருந்து 180042519122 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி மின் தடை பழுதுநீக்குவதற்கு கட்டணமில்லா சேவையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்