தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறிப்பு: 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி கொள்ளையடித்த பரபரப்பு சம்பவம் கண்காணிப்பு கேமராவில் சினிமா காட்சி போல் பதிவாகி இருந்தன. இதுதொடர்பாக முகமூடி கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-10-16 23:30 GMT

மூலக்குளம்,

சென்னை மதுராந்தகத்தில் வெங்கடேஸ்வரா பைனான்ஸ் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் (வயது 51) என்பவர் வேலை பார்த்து வருகிறார். புதுவையில் உள்ள வாடிக்கையாளர்களிடம் அவர் பணத்தை வசூல் செய்து விட்டுச் செல்வது வழக்கம்.

இதேபோல் நேற்று முன்தினம் புதுவையில் பல்வேறு இடங்களுக்கு சென்று வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு எல்லைப்பிள்ளைச்சாவடி பஜனை மடத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்£ர். அப்போது முகமூடி அணிந்த மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்தது.

அப்போது திடீரென பாலசுப்ரமணியனை வழிமறித்து கத்தியால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கூச்சலிட்டபடி நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனே அந்த கும்பல் பாலசுப்ரமணியனிடம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டது.

அந்த கும்பல் கத்தியால் வெட்டியதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து அடையாளம் காண்பதற்காக அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.

அப்போது சினிமா படங்களில் வருவது போல் பாலசுப்பிரமணியனை வழிமறித்து கொள்ளை கும்பல் தாக்கியதுடன் கத்தியால் வெட்டிய பரபரப்பு காட்சிகள் பதிவாகி இருந்தன. தொடர்ந்து அவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்ததில் தருமாபுரியைச் சேர்ந்த சரவணன், மதுபாலா, கதிர்காமத்தைச் சேர்ந்த கந்தவேலு, ஐயங்குட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அஜித், கல்மேடு பேட் பகுதியை சேர்ந்த சுதன் ஆகிய 5 பேர் தான் பாலசுப்பிரமணியனை தாக்கி பணப்பை பறித்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து அவர்கள் 5 பேரையும் கைது செய்ய 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். அவர்கள் திருக்கனூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து போலீசார் அங்கு சென்று சரவணன், மதுபாலா, கந்தவேலு, அஜித் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களது கூட்டாளியான கல்மேடுபேட் பகுதியை சேர்ந்த சுதனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 75 ஆயிரம், 3 செல்போன்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்