அரசு பஸ்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் டெண்டருக்கு தடை கோரி வழக்கு; போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

அரசு பஸ்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் டெண்டருக்கு தடை கோரிய வழக்கில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-10-16 23:00 GMT

மதுரை,

திருச்சி லால்குடியை சேர்ந்த சுதாகர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான 22 ஆயிரம் பஸ்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட உள்ளது. மேலும் ஒரு அரசு பஸ் எந்த இடத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை பயணிகள் தெரிந்து கொள்ள வசதியாக இணையதளத்திலும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தகவல் தெரிவிக்கும் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டங்கள் சுமார் ரூ.20 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான டெண்டர் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

சட்டப்படி ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகைக்கு டெண்டர் விடுவதாக இருந்தால் விண்ணப்பிப்பதற்கு 30 நாள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால் இந்த டெண்டருக்கு 18 நாள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி டெண்டர் அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், அரசு பஸ்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவதற்கான டெண்டர் விடுவதில் இறுதி முடிவு எடுக்கக்கூடாது. இந்த வழக்கு குறித்து போக்குவரத்துத்துறை செயலாளர் மற்றும் கமி‌ஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்