தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை: மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 5 பேர் பலி
தமிழகத்தின் பல இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி 5 பேர் பலியானார்கள்.
அருப்புக்கோட்டை,
தமிழகத்தின் பல இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி பெண்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். அதுபற்றிய விவரம் வருமாறு:–
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி ஆறுமுகம் (வயது 40). நேற்று அதே பகுதியில் வயல்காட்டுக்கு வேலைக்கு சென்றபோது மின்னல் தாக்கி அவர் பலியானார். அருப்புக்கோட்டை அருகே உள்ள கோப்பைய நாயக்கன்பட்டியை சேர்ந்த பிச்சையாண்டி மகள் மீனாட்சி என்பவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள அகரகோட்டாலத்தை சேர்ந்தவர் நேரு (32). இவர் அதே பகுதியில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டபோது மின்னல் தாக்கி இறந்தார். திருக்கோவிலூர் அருகே உள்ள காடியார் கிராமத்தை சேர்ந்த கணேசன் (50) வயல்வெளி பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி பலியானார். அவரது பசுமாடு ஒன்றும் இறந்தது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (23). மழை பெய்ததால் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.