வாலாந்தரவை ஊராட்சியில் எரிவாயு குழாய்கள் பதிக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

வாலாந்தரவை ஊராட்சியில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய்கள் பதித்து எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

Update: 2018-10-16 23:00 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்துக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இங்கு கிடைக்கும் எரிவாயுவை கம்பரசிங் ஸ்டேசன் அமைத்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள பூமி பூஜை கடந்த வாரம் நடைபெற இருந்தது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து சமாதான கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று தாசில்தார் (பொறுப்பு) சாந்தி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டபம் ஒன்றிய முன்னாள் தலைவர் முனியசாமி, வாலாந்தரவை முன்னாள் ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி, கிராம தலைவர்கள் சவுந்திரராஜன், சிவசாமி, முன்னாள் கவுன்சிலர் தனபாலன், வாலாந்தரவை ஜெயபால், வழுதூர் ராஜா, கோபால், மூர்த்தி, வக்கீல்கள் ஸ்ரீகாந்த், பிரவின்குமார் மற்றும் 8 கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன துணை பொது மேலாளர் கவுதமன் பொதுமக்களிடம் சமாதானம் பேசினார். ஆனால், தெற்குக்காட்டூர் உள்பட 8 கிராமங்களில் தற்போது செயல்படும் மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் எரிவாயு சேமிப்பு கிடங்கு போன்றவற்றால் மழை பெய்வது கூட தடுக்கப்பட்டு கடும் வறட்சி நிலை ஏற்பட்டு வருகிறது. ஓ.என்.ஜி.சி., கெயில் இந்தியா நிறுவனம் போன்றவைகளால் மழைப்பொழிவு குறைந்துபோனது. இதற்கிடையில் ஏற்கனவே ஓ.என்.ஜி.சி. மூலம் இயற்கை எரிவாயு எடுக்க மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்த நிலையில், அவற்றை நிறைவேற்றாமல் திட்டத்தை தொடங்கிவிட்டனர். அப்போதில் இருந்து இப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறோம். இந்த கூட்டம் சாயல்குடியில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்த போதே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தான் பேசி முடிவு எடுக்க முடியும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் (பொறுப்பு) சாந்தி கூட்டத்தை ரத்து செய்தார். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்