கால்வாயை சீரமைத்து மடப்புரம் கண்மாயில் தண்ணீர் நிரப்ப கோரிக்கை

மடப்புரம் கண்மாயின் வரத்து கால்வாயை சீரமைத்து, கண்மாயில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-10-16 22:00 GMT

திருப்புவனம்,

திருப்புவனம் ஒன்றியத்தை சேர்ந்தது மடப்புரம் கிராமம். இந்த கிராமத்திற்கான கண்மாய் திருப்புவனம்–பூவந்தி செல்லும் சாலையில் உள்ளது. இந்த கண்மாய் மூலம் சுமார் 1500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தநிலையில் கடந்த சில வருடங்களாக இந்த கண்மாய்க்கு தண்ணீர் வராததால் இந்த பகுதியில் விவசாயப்பணிகள் நடைபெறாமல் பாதிப்படைந்துள்ளது.

ஒரு சிலர் மட்டும் கிணற்று பாசனம் மூலம் விவசாயப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வறண்ட நிலையில் இருக்கும் இந்த கண்மாயில் சமீபத்தில் பெய்த மழையால் சிறிது தண்ணீர் உள்ளது. இதை நம்பியும், இந்த வருடம் பருவ மழை தங்களுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையிலும் இந்த பகுதி விவசாயிகள், விவசாயப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் இந்த கண்மாயிக்கு சக்குடியிலிருந்து கால்வாய் வழியாக சுமார் 4 கிலோமீட்டர் தூரம் கடந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு நிரப்பப்படும் தண்ணீர் பாசனத்திற்கு பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது தண்ணீர் கொண்டு வரப்படும் கால்வாயில் முட்புதர்கள் மண்டி கிடப்பதால், கால்வாயே தெரியாத அளவில் உள்ளது.

இந்தநிலையில் மடப்புரம் கண்மாய் தற்சமயம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் செலவில் மராமத்து செய்யப்பட்டு, கண்மாய் கரைகள் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் தற்போது மழை பெய்தால், அந்த தண்ணீரை தேக்கும் அளவிற்கு தற்போது கண்மாய் தயார் நிலையில் இருந்தும், கால்வாய் முதர்மண்டி கிடப்பதால், தண்ணீர் கொண்டு வர முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாம் வரத்து கால்வாயை சீரமைத்து கண்மாய்க்கு தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வருடமாவது மடப்புரம் கண்மாயில் தண்ணீர் நிரப்பப்பட்டு அதன் மூலம் விவசாயம் நடைபெற உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்